Published : 23 May 2021 05:50 AM
Last Updated : 23 May 2021 05:50 AM
கோபி-சத்தி சாலை மற்றும் தாளவாடி கரோனா சிகிச்சை மையத்தை ஈரோடு ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மீறுவோர் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் கோபி-சத்தி சாலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் இயங்கி வந்த கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, கடைக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதுபோல, முகக் கவசம் அணியாமல் சென்ற தனி நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பாக ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் பழனிதேவி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT