Published : 22 May 2021 03:14 AM
Last Updated : 22 May 2021 03:14 AM

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு - அரக்கோணம் பள்ளி தலைமை ஆசிரியர் ரூ.1 லட்சம் நிதியுதவி :

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தேவாசீர்வாதம்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழக முதல் வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாதம் ஊதியத்தை ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் வழங்கினார்.

தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்துத் தரப்பினரும் தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, மாவட்டந்தோறும் நிவாரணத் தொகை பெறப்பட்டு வருகிறது. மேலும், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் சார்பில் நிதியுதவியும் கரோனா தடுப்புப் பணிகளுக்கு தேவையான பொருட் களையும் வழங்கி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் பிரின்ஸ் தேவாசீர்வாதம். இவர், தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று வழங்கினார். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வசம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை பிரின்ஸ் தேவாசீர்வாதம் வழங்கினார்.

அதேபோல், ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜதினா என்ற மாணவி மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ இறுதியாண்டு படித்து வருகிறார். இவர், மடிக்கணினி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வசம் நேற்று ஒப்படைத்தார்.

மேலும், ராணிப்பேட்டையில் உள்ள இன்டோகூல் என்ற தனியார் நிறுவனம் சார்பில், மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டர், கையுறைகள், சானிடைசர், ரத்த அழுத்தம் கண்டறியும் கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், முகக்கசவம், ஃபேஸ் ஷீல்ட் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் வசம் நேற்று ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x