Published : 21 May 2021 03:13 AM
Last Updated : 21 May 2021 03:13 AM
ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் மூன்று மாத காலம் பணிபுரிய விரும்பும் மருத்துவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெருந்துறையில் செயல்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவர்கள் தேவை உள்ளது. இங்கு, தொகுப்பூதிய அடிப்படையில் மூன்று மாத காலத்திற்கு பொது மருத்துவர் (எம்பிபிஎஸ்), முதுநிலை மருத்துவர் (நுரையீரல் நிபுணர்), தகுதியுடைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும்.
பொது மருத்துவருக்கு ரூ.60 ஆயிரம் மாதாந்திர தொகுப்பூதியமும் மற்றும் முதுநிலை மருத்துவருக்கு (நுரையீரல் நிபுணர்) அரசு நிர்ணயித்த ஊதியத்தின் அடிப்படையிலும் 100 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும், ரூ.14 ஆயிரம் மாதாந்திர தொகுப்பூதியத்தில் 500 செவிலியர்களும், 20 ஆய்வக பணியாளர்கள் (லேப் டெக்னீசியன்கள்) மற்றும் 5 எக்ஸ்ரே டெக்னீசியன்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இப்பணியில் சேர விரும்புவோர் கல்வித்தகுதி சான்றிதழ், அடையாள அட்டை, மருத்துவக் கவுன்சில் பதிவு சான்றிதழ் (மருத்துவர்களுக்கு மட்டும்), பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன், ஈரோடு திண்டலில் செயல்படும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 7708722659 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT