Published : 19 May 2021 03:14 AM
Last Updated : 19 May 2021 03:14 AM
உயர் மின் கோபுரத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்குச் சேர வேண்டிய இழப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் சுதந்திரராசு, ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் பவர்கிரிட் நிறுவனம் விவசாய விளைநிலங்களின் வழியே உயர் மின்கோபுரங்களை அமைத்தது. இதற்கான இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனம் வழங்கவில்லை. ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், நிலத்திற்கான மதிப்பு விலை, ஒரு தென்னை மரத்திற்கு ரூ.36 ஆயிரத்து 500 மற்றும் கிணறு, ஆழ்துளைக் கிணறு, இதர மரங்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பின்பும், நிலம் வழங்கிய 360 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை சென்று சேரவில்லை. மேலும் தென்னைக்கு ரூ.32 ஆயிரத்து 280 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 13 ஆயிரத்து 150 தென்னை மரங்களுக்கு ரூ.7 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. 7000 இளம் தென்னைக்கு ரூ.2 கோடி என மொத்தம் ரூ.9 கோடி வழங்க வேண்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், இழப்பீடு நிலுவைத்தொகையை உடனே வழங்குவதாக பவர்கிரிட் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், நான்கு மாதமாகியும் இதுவரை இழப்பீடு தொகை விவசாயிகளைச் சென்றடையவில்லை. கரோனா பரவலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிலுவைத்தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT