Published : 19 May 2021 03:14 AM
Last Updated : 19 May 2021 03:14 AM

ஜம்புநதி கால்வாய் திட்ட நில இழப்பீடு வழங்கப்படுமா? : வனத்துறை அனுமதி கிடைக்காததால் பணிகள் தாமதம்

திருநெல்வேலி

ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்கான நில இழப்பீடு தொகை இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை.

தென்காசி மாவட்டத்தில் 0.388 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள ராமநதி அணையின் மூலம் 4,953 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. இதுபோல், ஜம்பு நதிமூலம் 4,050 ஏக்கர் பாசனப்பரப்பு பயன்பெறும் வகையில், ஜம்புநதி வழித்தடம் இயற்கையாகவே அமைந்துள்ளது. அதேநேரத்தில், ஜம்புநதி உற்பத்தியாகும் பகுதி இரண்டு பருவ காலங்களிலும் மழை மறைவு பிரதேசம் என்பதால், ஜம்பு நதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமில்லை.

எனவே, ராமநதி அணையின் உபரி நீரை ஜம்புநதி கால்வாய் மூலம் இணைப்பதால் கல்லூரணி, சிவநாடானூர், திப்பணம்பட்டி, அரியப்பபுரம், ஆவுடையானூர், பெத்தநாடார்பட்டி, பூலாங்குளம், வெங்கடாம்பட்டி, தெற்கு மடத்தூர், கீழக்கடையம், தீர்த்தாரப்பபுரம் என, 11 ஊராட்சிகளில் 21 குளங்களின் கீழுள்ள, 4,050 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும், 100 குக்கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த மேல்மட்ட கால்வாய் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை என்று நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், திப்பணம்பட்டி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தர்மராஜ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு திருநெல்வேலி சிறப்பு திட்ட கோட்டம் உதவிப் பொறியாளர் விஜயலட்சுமி அளித்த பதில்:

இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு 2015-ல் ரூ. 5 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2020 – 21-வது நிதியாண்டில் ரூ. 4.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு நிலம் கையகப் படுத்த, 362 உரிமையாளர்களின் சம்மதம் பெற வேண்டியுள்ளது. இதுவரை, 70 சதவீதம் நில உரிமையாளர்களிடம் இருந்து சம்மத கடிதம் பெறப் பட்டுள்ளது.

சம்மத கடிதம் கொடுத்தவர் களில் இதுவரை யாருக்கும் நில இழப்பீடு தொகை வழங்கப்பட வில்லை. நில இழப்பீடு தொகை வழங்கக்கோரி மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை நிலம் கையகப்படுத்தவில்லை.

ராமநதி முதல் தோரணமலை வரை 3.21 கிமீ வரை கால்வாய் தோண்டும் பணியில் 0.6 கிமீ முதல் 1.3 கிமீ வரை சுமார் 700 மீட்டர் நீளத்துக்கு மேல்மட்ட கால்வாய் அமைக்கப்பட வேண்டும். இந்த கால்வாயின் அகலம் 2.3 மீ ஆகும்.

வனத்துறையின் அனுமதி வேண்டி இணையவழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள் ளது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்ட பின்னர்தான் பணிகளை தொடங்க வேண்டும் என்ற பொதுவான ஆட்சேபனை உள்ளது.

இத்திட்டத்துக்கான நிதி ஆதாரம் நபார்டு வங்கி மூலம் ரூ. 39.02 கோடியும், தமிழக அரசின் பங்கீடாக ரூ. 2.05 கோடி என்று மொத்தம் 41.07 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வனத்துறையின் அனுமதி தேவைப்படுவதால், தற்காலிகமாக பணிகள் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஜம்புநதி இளை ஞர் மீட்பு குழுவினர் கூறிய தாவது,

ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை செயல்படுத்த அரசு நிதி ஒதுக்கியும், இடம் கொடுப்பவர் களுக்கு நில இழப்பீடு இன்னும் வழங்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வனத்துறை அனுமதி கிடைக்காததால், திட்டம் தாமதமாகிறது. உடனடியாக நில இழப்பீட்டுத் தொகையை வழங்கி, வனத்துறை அனுமதியையும் பெற்று, இந்த திட்டத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x