Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நின்றதால் வெள்ள அபாயம் நீங்கியது. விளைநிலங்கள், சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்ததையடுத்து 4 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது.
‘டவ் தே’ புயல் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. வாழை, ரப்பர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடிக்கு மேல் திறந்து விடப்பட்ட தண்ணீிர் திற்பரப்பு அருவி மற்றும் தாமிரபரணி ஆற்றில் பாய்ந்து மழைநீருடன் கலந்து ஓடியது.
இதனால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தீயணைப்பு மீட்பு துறையின் 18 குழுக்கள் தாழ்வான பகுதிகளில் மீட்பு பணிக்கு தயாராக இருந்தனர்.
குழித்துறை, திக்குறிச்சி பகுதிகளில் வீடுகள், தெருக்களை வெள்ளம் சூழ்ந்தது. ஆறு, கால்வாய் ஓரம் உள்ள சாலைகள் மழைநீரால் மூழ்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனர். கடந்த 5 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள மீனவ கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டு சேதங்கள் நிகழ்ந்தன. மழைக்கு 2 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் மதியம் முதல் மழை குறைந்தது. நேற்று மழை இன்றி மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தது. இதனால் விளைநிலங்கள், சாலைகளில் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியது. வெள்ள அபாயத்தால் அச்சத்தில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக புத்தன் அணையில் 37 மி.மீ., மழை பதிவானது. குழித்துறையில் 24, பேச்சிப்பாறையில் 36, சுருளகோட்டில் 31, குளச்சலில் 34, அடையாமடையில் 26 மிமீ., மழை பெய்திருந்தது.
மலையோரப் பகுதிகளிலும் மழை இல்லாததால் அணை களுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. பேச்சிப்பாறை அணைக்கு 1,404 கனஅடி தண்ணீர் வருகிறது. . நீர்மட்டம் 43.05 அடியாக உள்ளது. அணையில் இருந்து 755 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 62.30 அடியாக உள்ளது. அணைக்கு 1,416 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு ஒன்றில் 11.87 அடி தண்ணீர் உள்ளது. 170 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு 2 அணையில் நீர்மட்டம் 11.97 அடியாக உள்ள நிலையில் 237 கனஅடி தண்ணீர் வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 7.5 அடியாக உயர்ந்துள்ளது.
தென்காசியில் அதிகளவாக 22 மி.மீ மழை
அரபிக்கடலில் உருவான ‘டவ் தே’ புயல் காரணமாக, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 22 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணை மற்றும் அடவிநயினார் அணையில் தலா 15 மிமீ, பாபநாசம், குண்டாறு அணை மற்றும் செங்கோட்டையில் தலா 8, ஆய்க்குடியில் 5.60, மணிமுத்தாறு, நம்பியாறு, ராமநதி அணை மற்றும் சங்கரன்கோவிலில் தலா 4, கடனாநதி அணை, சிவகிரியில் தலா 3, களக்காட்டில் 2.2, சேரன்மகாதேவியில் 1 மிமீ மழை பதிவானது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகமாகவே உள்ளது. இந்த அணைக்கு நேற்று காலையில் 1,402 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம் 107.15 அடியாக இருந்தது. அணையிலிருந்து 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு 541 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 250 கனஅடி திறக்கப்பட்டது. மற்ற அணைகளின் நீர்மட்டம்: சேர்வலாறு- 120.57, வடக்கு பச்சையாறு- 42.49, நம்பியாறு- 12.53, கொடுமுடியாறு- 18.25, கடனாநதி அணை 65.90, ராமநதி அணை 51.50, குண்டாறு அணை 29.25 மற்றும் அடவிநயினார் அணை நீர்மட்டம் 40 அடியாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT