Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

சேலம், ஈரோடு மாவட்டங்களில் முழு ஊரடங்கால் - வீடுகளில் முடங்கிய மக்கள்; வெறிச்சோடிய சாலைகள் :

முழு ஊரடங்கு காரணமாக ஈரோடு பேருந்து நிலையம் மற்றும் மேட்டூர் சாலை வாகனப்போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. அடுத்த படம் : எப்போதும் பரபரப்பாக இருக்கும் சேலம் திருவள்ளுவர் சிலை சாலை நேற்று முழு ஊரடங்கு காரணமாக மக்கள் மற்றும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி இருந்தது.

சேலம் / ஈரோடு

ஞாயிற்றுக் கிழமையான நேற்று முழு ஊரடங்கு காரணமாக, சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். சாலைகளில் தேவையின்றி சுற்றியவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

முழு ஊரடங்கான நேற்று சேலம் மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதியில் மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக் கான கடைகள் தவிர பிற கடைகள்மூடப்பட்டிருந்தது. இதனால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் குறைந்திருந்தது.

சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் சாலை, சுந்தர் லாட்ஜ் சிக்னல், 4 ரோடு, 5 ரோடு, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, பட்டைக்கோயில், பழைய பேருந்து நிலைய பகுதி, தாதகாப்பட்டி கேட், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம் பட்டி உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில், போலீஸார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடு பட்டனர். இதேபோல, ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, நரசிங்கபுரம் உள்ளிட்ட நகராட்சிப் பகுதிகளின் முக்கிய இடங்களில் போலீஸார் ஆங்காங்கே தடைகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். கிராமப் பகுதிகளிலும், நெடுஞ் சாலைகளை ஒட்டிய பகுதிகளிலும் போலீஸார் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சேலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்டோர், மருந்து வாங்குவது உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக சாலைகளில் நடமாடியதைக் காண முடிந்தது. அவர்களை போலீஸார் விசாரித்து அனுப்பி வைத்தனர். தேவையின்றி சுற்றியவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர். ஒட்டுமொத்தமாக, மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கினால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.

ஈரோடு

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்கெட், உழவர் சந்தை, மளிகைக் கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு இருந்தன. அம்மா உணவகங்கள் மற்றும் தனியார் உணவகங்களில் பார்சல் உணவு வழங்கப்பட்டது. மருந்தகங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க் ஆகியவை செயல்பட்டன.

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப் பட்டிருந்தது.

மாவட்டம் முழுவதும் 13 நிலையான சோதனைச் சாவடிகள் 42 கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்கள் விசாரிக்கப்பட்டு, அவசியமின்றி வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரோடு நகரில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x