Published : 15 May 2021 03:14 AM
Last Updated : 15 May 2021 03:14 AM
திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 20 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்' வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றை தடுக்க முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த தளர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிந்தனர்.
உணவகம், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை மாறி ஒரு சில உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும், தேநீர் கடைகளில் அதிக அளவில் ஆட்களை திரட்டி சிலர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 4 நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தினசரி 350-ஐ கடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.
இதில், அரசின் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட கடைகள், கரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாமல் இயங்கி வந்த கடைகளுக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்' வைத்தனர். திருப்பத் தூர் சார் ஆட்சியர் வந்தனாகர்க் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தலைமையிலான வருவாய்த் துறையினர் திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட ஒரு மெக்கானிக் கடைக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்' வைத்தனர். அதேபோல, நகர் பகுதிகளில் ஆங்காங்கே செயல் பட்டு வந்த தேநீர் கடைகளில் அதிக அளவில் ஆட்களை திரட்டி கரோனா பரவல் அதிகரிக்க காரணமாக இருந்த 12 தேநீர் கடைகளுக்கு ‘சீல்' வைக்கப்பட்டன.
திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் உள்ள ஒரு உணவகத் தில் வாடிக்கையாளர்களை அமர வைத்து உணவு வழங்கிய உணவகத்துக்கும் வருவாய்த் துறையினர் ‘சீல்' வைத்தனர்.
ரம்ஜான் பண்டிகையை யொட்டி வருவாய்த் துறையினர் நேற்று ரோந்துப்பணியில் ஈடு பட்டனர். அப்போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வியாபாரிகளிடம் இருந்து 20 ஆயிரத்து 800 அபராதமாக வசூலித்தனர்.
நாட்றாம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வட்டாட்சியர் சுமதி தலைமையிலான வருவாய்த் துறையினர் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.சி.எஸ் பிரதான சாலையில் அனுமதியின்றி திறக்கப்பட்ட கணினி மையத்துக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்' வைத்து, ரூ.1,000 அபராதம் வசூலித்தனர்.
வாணியம்பாடி பேருந்து நிலையம், சி.எல்.சாலை, மலாங்கு ரோடு, நேதாஜி சாலை, காதர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர் நேற்று நடத்திய ஆய்வில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 5 கடைகளுக்கு ‘சீல்' வைத்து ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.
அதேபோல, வாணியம்பாடியில் முகக்கவசம் அணியாமலும், அவசியம் இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 18 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆம்பூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஆம்பூர் நகர் பகுதியில் வருவாய்த் துறையினர் நேற்று காலை முதல் பகல் 1 மணி வரை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, விதிமுறை களை பின்பற்றாதவர்களிடம் இருந்து வருவாய்த்துறையினர் ரூ.5,400 அபராதம் வசூலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேத்துப்பட்டு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT