Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவசமாக உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 27 கோயில்களில், அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக தற்போது கோயில்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அன்னதானத் திட்டம் நடைபெற்று வரும் கோயில்கள் மூலம், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள், உதவியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் பயனடையும் வகையில் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 3,000 உணவு பொட்டலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 2,000 உணவு பொட்டலங்களும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு 600, ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைக்கு 700, பவானி அரசு மருத்துவமனைக்கு 200 உணவு பொட்டலங்கள் என மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் வழங்கப்படவுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் உணவு தயாரிக்கும் பணி நடைபெறும் கொங்கலம்மன் கோயில் அன்னதானக் கூடத்தில், மண்டல இணை ஆணையர் மங்கையர்கரசி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறும்போது, அன்னதான திட்டம் நடைபெற்று வரும் 27 கோயில்கள் மூடப்பட்டு இருந்தாலும், வழக்கம்போல் அனைத்துக் கோயில்களிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மொத்தம் 950 பேர் பயனடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட கோயில்களில் வைத்து உணவு பொட்டலங்களை வழங்காமல், வஉசி பூங்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து உணவு வழங்கப்படுகிறது. தற்போது, கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனைகளுக்கு 2050 உணவு பொட்டலங்கள் நாள்தோறும் வழங்கப்படுகிறது, என்றார். ஆய்வின்போது உதவி ஆணையர் அன்னக்கொடி, செயல் அலுவலர் ரமணி காந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT