Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM
தமிழக அரசு அறிவித்துள்ள கூடுதல்தளர்வை அடுத்து திருநெல்வேலியில் நாட்டு மருந்து மற்றும் பழக்கடைகள் திறக்கப்பட்டு நேற்று விற்பனை நடைபெற்றது. நாட்டு மருந்து கடைகளில் மருந்து வாங்க கூட்டம் அதிகமிருந்தது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முழுஊரடங்கின் 3-ம் நாளான நேற்று திருநெல்வேலியில் பலசரக்கு, காய்கறி கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. நாட்டு மருந்து கடைகள் மற்றும் பழக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கூடுதல்தளர்வாக நாட்டு மருந்து மற்றும்பழக்கடைகளை திறக்க அரசுஅனுமதி அளித்தது. திருநெல்வேலியிலுள்ள பெரிய பழக்கடைகள் மற்றும் சாலையோர பழக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனைநடைபெற்றது. திருநெல்வேலி டவுன், சந்திப்பு மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள நாட்டு மருந்து கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இந்த கடைகளில் மருந்துகளை வாங்க அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. மேலப்பாளையம் உழவர் சந்தை கடைகள் அருகிலுள்ள பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டு விற்பனை நடைபெற்றது.
முகக்கவசம் விற்பனை
கரோனா தொற்றை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று திருநெல்வேலி மாநகராட்சி சார்பில்முக்கிய சந்திப்புகளில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.மாநகரில் பல்வேறு கடைகளிலும், சாலையோரங்களிலும் முகக்கவசம் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. பாளையங்கோட்டையில் சாலையோரத்தில் பல்வேறு விலைகளில் முகக்கவசங்கள் விற்பனைக்கு கட்டி தொங்கவிடப்பட்டிருக்கிறது. ரூ.5 முதல் ரூ.40 வரை விலையில் இவை விற்பனையாகின்றன. ஆடைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் திருப்பூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூர் பகுதிகளில் இருந்து இவற்றை கொள்முதல் செய்துவந்து இங்கு விற்பனை செய்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. கரோனாவை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கரோனா நோயாளிகளுக்கு உலக சுகாதார அமைப்புமற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மருந்துகள் அளிக்கப்படுகின்றன.இதற்கிடையே இயற்கை மருந்துகளை சாப்பிடுவதன் மூலம்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம் என, சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் நாட்டு மருந்துகள் பக்கம் சிலர் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.
மூலிகைகள் மற்றும் நாட்டு மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
தூத்துக்குடி டபிள்யூஜிசி சாலையில் பழமையான நாட்டு மருந்து கடை உள்ளது. இந்த கடையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலிகைகள் மற்றும் மருந்து பொருட்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
குறிப்பாக இஞ்சி, மஞ்சள், துளசி, மிளகு, சுக்கு, திப்பிலி, அதிமதுரம், கடுக்காய், கபசுரக்குடிநீர் பொடி, அத்திப்பழம் போன்றவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதேபோல தூத்துக்குடியில் உள்ளமற்ற நாட்டு மருந்து கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT