Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM
ஆரணி அருகே மூதாட்டி கொலை வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பிராட்வே பகுதியில் வசித்தவர் மூதாட்டி லட்சுமி(63). இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் பெரிய ஏரியில் கடந்தாண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து களம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசிக்கும் ராமதாஸ், பாரதி மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய 3 பேரையும் நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “சென்னை கோயம் பேடு பகுதியில் இருந்த கடையை விற்பனை செய்த மூதாட்டி லட்சுமிக்கு முன் பணமாக ரூ.17 லட்சம் கிடைத் துள்ளது. அந்த பணத்தை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமதாசுக்கு ரூ.7 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை லட்சுமி, அவரது மகன் பிரேம்குமார் ஆகியோர் திருப்பி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், தனது நண்பர்கள் தமிழ்செல்வன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ராஜ் ஆகியோர் உதவியுடன் பிரேம்குமாரை கொலை செய்து, அவரது உடலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்சேவூர் கிராமத்தில் உள்ள கிணற்றில் வீசி உள்ளனர்.
பின்னர், புளியந்தோப்பு பகுதியில் வசிக்கும் பாரதி மூலமாக ஆரணிக்கு மூதாட்டியை அழைத்து வந்து கழுத்தை நெறித்து கொலை செய்து ஏரியில் வீசி உள்ளனர். பிரேம்குமார் கொலை வழக்கில் பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜியை கைது செய்துள்ளனர். மூதாட்டி கொலையில் ராமதாஸ் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT