Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM

முழு ஊரடங்கை முன்னிட்டு - நெல்லையில் காய்கறிகள் விலை சற்று உயர்வு :

கடையநல்லூரில் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் முக்கிய கடைவீதிகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் 24-ம் தேதி வரை இருவார காலத்துக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வரும்என்றும், இதற்காக நேற்றும்,இன்றும் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளுக்கு மக்கள் சென்றனர். இருசக்கர வாகனங்களில் கடைவீதிகளுக்கு ஏராளமானோர் சென்றதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருநெல்வேலி டவுன் ரதவீதிகள், எஸ்என் ஹைரோடு, மேலப்பாளையம் சந்தை பகுதி, விஎஸ்டி பள்ளிவாசல் பகுதி, கொக்கிரகுளம் சாலை என்று முக்கிய கடைவீதிகள் அமைந்துள்ள சாலைகளில் கூட்டம் அதிகமிருந்தது.

கடைவீதிகள் மற்றும் மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமிருந்த நிலையில் பலரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். ஆனால் சிலர்மூக்கு, வாயை மூடாமல் பெயரளவுக்கு முகக்கவசத்தை காதுகளில் மாட்டிக்கொண்டு அஜாக்கிரதையாக நடமாடினர்.

தென்காசி

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதை முன்னிட்டு, பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்குத் திரண்டனர். இதனால் கடைவீதிகள் களைகட்டின. வழக்கத்தைவிட கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் நேற்று அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன. நாகர்கோவில் கோட்டாறு, வடசேரி, அப்டா சந்தை, நீதிமன்ற சாலை உட்பட நகரின் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.

முழு ஊரடங்கு காலத்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.இது போல் டாஸ்மாக் கடைகளிலும் மது பானங்கள் வாங்க ஏராளமானோர் திரண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x