Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - புதிய கட்டுப்பாடுகளால் பகல் நேரத்தில் கடைகள் அடைப்பு : காவல் துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு

திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி பிரதான சாலையில் மூடப்பட்டுள்ள கடைகள்.

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் பகல் 12 மணிக்குப் பிறகு கடைகள் அடைக்கப்பட்டு பொது மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தொற்று பாதிப்பும், உயிரிழப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், நேற்று தொடங்கி வரும் 20-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கடைகள் திறந்திருக்கலாம். மற்ற அனைத்து கடைகளும் மூடியிருக்க வேண்டும்.

தேநீர், பேக்கரிகள், உணவகங் களில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை என அறிவிக் கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகளால் நேற்று காலை முதலே பொதுமக்கள் நடமாட்டம் காய்கறி, மளிகை கடைகளில் அதிகம் காணப்பட்டது.

வேலூரில் உள்ள மொத்த காய்கறி விற்பனை நிலையங்கள், தற்காலிக சில்லறை வியாபாரம் நடைபெற்ற கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வேலூர், காட்பாடி, குடியாத்தம் நகரில் உள்ள உழவர் சந்தைகளில் பெரிய அளவில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. உண வகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. காவல் துறையினர் பகல் 11.30 மணி முதல் ரோந்து சென்று 12 மணிக்கு கடைகளை மூட வேண் டும் என எச்சரித்தபடி சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம் பகுதியில்நேற்று காலையில் பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர். கடைகள் மூடப்பட்டாலும் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவில் இருந்தனர். மாலை 6 மணிக்குப் பிறகு பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தளவில் இருந்தது.

டாஸ்மாக் கடைகள்

அரசின் புதிய கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை 8 மணி நேரம் என்பது 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 8 மணிக்கு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் திறககப்பட்டன.

வேலூர் நகரில் உள்ள சில கடைகளில் காலை 10 மணிக்குப் பிறகு கூட்டம் அதிகரிக்கத் தொடங் கியது.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் நடை முறைக்கு வந்ததையொட்டி வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க நேற்று காலை கடை வீதிகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.

திருப்பத்தூர் பஜார் பகுதி, புதுப்பேட்டை சாலை, ஜின்னா ரோடு, திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலை, திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலை, பழ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் கரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன.

வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளிலும், மார்க்கெட் மற்றும் பஜார் பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. முழு ஊரடங்கு போல் எண்ணிய பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிகளில் திரண்டதால் கரோனா விதிமுறைகள் முழுமையாக மீறப்பட்டன. வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளிலும் அளவுக்கு அதிகமான கூட்டம் நேற்று காணப்பட்டது.

வரும் 14-ம் தேதி ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகமாக திரண்டனர். இதனால், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஜார் பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நேரம் செல்ல, செல்ல ஒவ்வொரு கடையாக மூடப்பட்டன. பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டதால் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. கரோனா பரவல் காரணமாக புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை கண்டறிய ஒவ்வொரு வட்ட அளவில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் வருவாய், காவல், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள், நகர் முழுவதும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கரோனா விதிமீறல்களில் ஈடுபடுவோர்களுக்கு அபராதம்விதிப்பது, ஒரு முறைக்கு மேல் தொடர்ந்து விதிமீறல் களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு ‘சீல்' வைப்பது உள்ளிட்ட நடைமுறை களை நிறைவேற்றுவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் நேற்று முழுமையாக மூடப்பட்டு மாவட்டம் முழுவதும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதன் மூலம் அடுத்த சில நாட்களில் கரோனா தொற்று பாதிப்பு குறைய வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x