Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் - அதிகபட்சமாக 29 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் : குறைந்த சுற்றுகள் கொண்ட போளூர் மற்றும் வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திருவண்ணா மலை தொகுதியில் அதிகபட்சமாக 29 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. குறைந்த சுற்றுகள் கொண்ட போளூர் மற்றும் வந்தவாசி தொகுதி முடிவுகள் முதலில் தெரிய வாய்ப்புள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது. 8 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (2-ம் தேதி) எண்ணப்படவுள்ளன.

திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ஆரணி அடுத்த தச்சூர் அண்ணா பொறியியல் கல்லூரி என 2 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.

400 வாக்குச்சாவடிகள்

ஒவ்வொரு தொகுதியிலும் தலா 14 மேஜைகள் போடப்படப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுற்றுகள் முடிவு செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் 400 வாக்குச்சாவடிகள் உள்ளதால், 29 சுற்றுகள் எண்ணப்படவுள்ளன.

வாக்கு எண்ணிக்கை சுற்றுகள்

இதேபோல், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் 382 வாக்குச்சாவடிகள் உள்ளதால் 28 சுற்றுகளும், கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 345 வாக்குச்சாவடிகள் உள்ளதால் 25 சுற்றுகளும், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 338 வாக்குச் சாவடிகள் உள்ளதால் 25 சுற்றுகளும், போளூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 333 வாக்குச் சாவடிகள் உள்ளதால் 24 சுற்றுகளும், ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் 386 வாக்குச்சாவடிகள் உள்ளதால் 28 சுற்றுகளும், செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதியில் 371 வாக்குச்சாவடிகள் உள்ளதால் 27 சுற்றுகளும், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 330 வாக்குச்சாவடிகள் உள்ளதால் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

தபால் வாக்குகள்

தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதன்பிறகு, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும்பணி தொடங்கும். பிற்பகலுக்கு பிறகு முடிவுகள் தெரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த சுற்றுகள் கொண்ட போளூர் மற்றும் வந்தவாசி தொகுதி முடிவுகள் முதலில் தெரிய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் 29 சுற்றுகள் கொண்ட திருவண்ணாமலை தொகுதியின் முடிவு இரவு வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x