Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM

திறந்தவெளி கழிப்பிடமாக்கி குப்பைகளை கொட்டும் மக்கள் : நெல்லை வேய்ந்தான்குளத்தை வெறுக்கும் பறவைகள் : சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான முயற்சிகள் அனைத்தும் பாழ் :

பறவைகள் வருகைக்காக மணல் திட்டுகள் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட திருநெல்வேலி வேய்ந்தான்குளம், கழிவுகள் கொட்டப்படுவதால் தற்போது நோய்வாய்ப்பட்டது போன்று காட்சியளிக்கிறது. பறவைகள் இந்த பக்கம் திரும்புவது கூட இல்லை. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி டவுன் நயினார்குளம், மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட வேய்ந்தான்குளம் ஆகியவை மாநகரில் பெரியநீராதாரங்கள். இந்த நீராதாரங்களில் கழிவுகள் சேரும் விவகாரம் பலஆண்டுகளாக நீடிக்கிறது. வேய்ந்தான்குளம் அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, சங்கரன்கோவில் போன்ற இடங்களுக்குஇயக்கப்படும் பேருந்துகள், பிக்பஜார் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படுகின்றன. இதுபோல பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரேயுள்ள திடலில் இருந்து மதுரை உள்ளிட்ட தொலைதூரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சமூக விரோத செயல்கள்

தற்காலிக பேருந்து நிலையத்துக்கு வரும் மக்களில் பெரும்பாலானோர், அருகே அமைந்துள்ள வேய்ந்தான்குளத்தின் கரைகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

உணவகங்கள், கடைகளில் இருந்தும் கழிவுகள், குப்பைகள் இந்த குளத்துக்குதான் வந்து சேர்கின்றன. மதுபான பாட்டில்கள் நூற்றுக்கணக்கில் குளத்தில் கிடக்கின்றன. இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்களுக்கும் பஞ்சமில்லை. குளத்தின் வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அதிலும் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் குளத்தில் நீராதாரம் பெருமளவுக்கு கெட்டுவிட்டது. எனவே, இவ்வாண்டு இந்த குளத்துக்கு பறவைகள் வரவில்லை. கடந்த சில வாரங்களாக பாளையங்கோட்டை பகுதியில் பெய்த மழையால் குளத்தில் தண்ணீர் பெருகியது. ஆனாலும் பறவைகளை இங்கு பார்க்க முடியவில்லை.

கடந்த 2019-ல் இந்த குளத்தைமேம்படுத்தி பறவைகள் தங்குவதற்கு மணல் திட்டுகளை உருவாக்கியிருந்தனர். அப்போதைய ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டு சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது குளத்தில் தண்ணீர் பெருகி, ஏராளமான பறவைகள் வந்து தங்கின. தொடர்ச்சியாக கடந்த 2020-ம் ஆண்டிலும் குளத்துக்கு பறவைகள் வந்தன. ஆனால் இவ்வாண்டு பறவைகள் வரவில்லை.

மக்களுக்கு அக்கறை தேவை

இந்த குளத்தை தூர்வாரி செப்பனிட காரணமாக இருந்தவர்களில் ஒருவரான சாமி நல்லபெருமாள் கூறும்போது, “வேய்ந்தான்குளத்திலும், அதன் வரத்து கால்வாய்களிலும் கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டுவது குறித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

முக்கியமான இந்த நீராதாரத்தை காப்பதில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அக்கறை இருக்க வேண்டும். குளத்தை பாதுகாத்து பராமரிக்கும் பணிகளில் அரசுத்துறைகள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

மனிதர்கள் தொந்தரவு

பறவைகள் ஆர்வலர் மதிவாணன் கூறும்போது, “கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து கோடை வரையில், இந்த குளத்தில் பறவைகள் தங்கியிருந்து கூடுகட்டி, குஞ்சுகள் பொரித்தன. முக்கியமாக நாமக்கோழி, தாழைக்கோழி, நீலதாழைக்கோழி, பவளக்கால் உள்ளான் ஆகிய பறவைகள் இந்த குளத்தில் கூடுகள் கட்டியிருந்தன. இவ்வாண்டு பறவைகளை பார்க்க முடியவில்லை. கழிவுகள், மனிதர்களால் ஏற்படும் தொந்தரவுகளால் பறவைகள் இந்த குளத்தை புறக்கணித்துள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x