Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM
சேலம் மாவட்டத்தில் எள் அறுவடை பணி தொடங்கியுள்ள நிலையில், இந்தாண்டு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கோடை காலத்துக்கு முந்தைய பயிராக எள் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இரவைப் பயிராகவும், மானாவாரி பயிராகவும் எள் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் பருவமழை போதிய அளவு பெய்த நிலையில், நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு பரவலாக போதிய மகசூல் கிடைத்தது.
இந்நிலையில், கோடைக்கு முந்தைய பயிராக எள்ளை சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் பரவலாக சாகுபடி செய்தனர். இந்நிலையில், நடப்பாண்டு ஜனவரியிலும் சேலம் மாவட்டத்தில் மழை பெய்தது. இதனால், மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த எள் பயிருக்கும் போதிய அளவு நீர் கிடைத்தது.
இதனால், எள் செழித்து வளர்ந்து தற்போது, அறுவடைக் காலம் வந்துள்ளதால், மாவட்டத்தில் ஆங்காங்கே எள் அறுவடைத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட வட்டாரங்களில், எள் அறுவடைத் தொடங்கியுள்ளன. அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளில் இருந்து, எள்ளை பிரித்தெடுக்க வசதியாக, அவற்றை களங்களில் உலர்த்தும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனினும், களம் வசதி இல்லாத இடங்களில் விவசாயிகள் சாலையோரங்களிலும், போக்குவரத்து குறைந்த சாலைகளின் ஒரு பகுதியிலும், நெடுஞ்சாலைகளில் சர்வீஸ் ரோடுகளிலும் விவசாயிகள் எள் செடிகளை வெயிலில் உலர்த்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக விவசாயி கள் சிலர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக கிணறுகளில் போதிய நீர் இருப்பு இருந்ததைப் பயன்படுத்தி எள் சாகுபடியில் ஈடுபட்டோம். ஜனவரியில் கிடைத்த மழையும் எள் பயிர் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருந்தது. தொடர்ந்து, வெயிலின் தாக்கமும் பயிருக்கு சாதகமாக இருந்தது. தற்போது எள் அறுவடை செய்துள்ளோம். அறுவடை செய்த எள் செடிகள் வெயிலில் நன்கு உலர்ந்ததும் அவற்றை போரடித்து எள்ளை உதிர்த்து எடுப்போம். இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT