Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM
முழு ஊரடங்கு நாளான நேற்று உணவகங்களில் பார்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தும் சேலம் மாவட்டத்தில் 95 சதவீதம் உணவகங்கள் செயல்படவில்லை.
கரோனா தொற்று பரவலை தடுக்க நேற்று ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கின்போது, உணவகங்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி, மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இருந்தபோதும் சேலம் மாவட்டத்தில் சாலையோர உணவகங்கள் தொடங்கி, பெரிய உணவகங்கள் வரை 95 சதவீதம் உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், மருத்துவம், காவல், மின் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் தேநீர் கூட கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகினர்.
ஆன்லைன் மூலம் உணவுப் பொட்டலங்களை பெற்றுக் கொள்ளவும் அனுமதியிருந்தபோதும், உணவகங்கள் மூடப்பட்டதால், வெளியூர்களில் இருந்து பணி நிமித்தமாக தங்கியிருந்த இளைஞர்கள் உணவு கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகினர்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஒட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பி.எல்.பழனிசாமி கூறியதாவது:
அரசு முழு ஊரடங்கு அறிவித்தநிலையில் சாலையில் நடமாடுபவர்கள் மீது வழக்குப் பதிவு, வாகனம் பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனற அச்சம் மக்களிடம் நிலவியது. இதனால், மக்கள் நடமாட்டம் முற்றிலும் முடங்கியது.
இந்நிலையில், உணவங்களில் பணிபுரியும் ஊழியர்கள், கடைக்கு வருவதில் பிரச்சினை ஏற்பட்டது. உணவகங்களில் பணிபுரிவோருக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை வழங்கி, பிரத்யேக அனுமதி வழங்கியிருந்தால், பணியாளர்கள் பிரச்சினையின்றி பணிக்கு வருவார்கள். நாங்கள் அடையாள அட்டை வழங்க அனுமதி கிடைக்கவில்லை.
உணவகங்களில் பார்சல் விற்பனையை தொடங்கினால், எவ்வளவு பார்சல்கள் என கணக்கிட முடியாது. உணவு வகைகளின் தேவையை அறியாமல் சமைத்தால் விற்பனை இல்லாமல் நஷ்டமாகிவிடும். ஏற்கெனவே, இரவு நேர ஊரடங்கு காரணமாக இரவு 10 மணிக்கு முன்னதாகவே, விற்பனையை முடிக்க வேண்டியிருக்கிறது.
அதனால், இரவு விற்பனையை குறைத்துள்ளோம்.
இப்பிரச்சினைகள் காரணமாக முழு ஊரடங்கில் உணவகங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளித்துவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT