Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM

அம்மா உணவகம், உழவர் சந்தை வழக்கம் போல் இயங்கும் : ஈரோடு மாவட்ட நிர்வாகம் தகவல்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் அம்மா உணவகம், உழவர் சந்தைகள் வழக்கம் போல் இயங்கும், என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கான இன்று பொதுப் போக்குவரத்து இருக்காது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும்.

அதே சமயம் ஈரோடு மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனம், பால், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படும். பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும். இதுபோல் ஈரோடு மாநகரில் உள்ள 13 அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும். பார்சல் மூலம் உணவுகள் வழங்கப்படும்.

மற்ற உணவகங்களும் வழக்கம்போல் இயங்கினாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பார்சலில் மட்டும் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் உணவுகள் பார்சலில் மட்டும் வழங்கப்படும். இதேபோல் உழவர் சந்தையும் இன்று வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x