Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

வாக்கு எண்ணும் பணியில் 2,196 பேர் ஈடுபடவுள்ளனர் : சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

சேலம்

சேலம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் 2,196 பேர் ஈடுபடவுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி, அம்மாப்பேட்டை  கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தலைவாசல் மாருதி கல்வி நிறுவனம், சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களும் 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மே 2-ம் தேதி வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை பணியில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தலா 14 மேஜைகள் அமைக்கப்படவுள்ளன. இப்பணியில் 2,196 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒவ்வொரு மேஜைக்கும் வாக்கு எண்ணும் பணியில் தலா ஒரு மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என மொத்தம் 3 பேர் பணியில் இருப்பர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளை பாதுகாப்பு அறையிலிருந்து வெளியே எடுத்து வந்து மேற்பார்வையாளர்களிடம் வழங்கி வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் அவற்றை மீண்டும் பாதுகாப்பு அறைக்கு எடுத்து செல்ல ஒரு மேஜைக்கு ஒரு உதவியாளர் பணியில் இருப்பர்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கை அன்று காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வர வேண்டும். காலை 7.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுகின்ற அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

காலை 7.55 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் அனைவரும் வாக்கு எண்ணிக்கையின் ரகசிய காப்பு உறுதிமொழியை ஏற்க வேண்டும்.தொடர்ந்து காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மையத்தில் கைப்பேசி கொண்டுவர அனுமதி இல்லை. கைப்பேசியை அதற்கென ஒதுக்கப்பட்ட தனி அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி பணிகளை திறம்பட மேற்கொண்டு, உண்மையாகவும், நேர்மையாகவும், சிறப்பாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x