Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

ரூ.10 லட்சத்துக்கு சிறுமியை விற்பனை செய்த வழக்கில் - சேலத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை : குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

சேலத்தில் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ் மற்றும் மல்லிகை செல்வராஜ் ஆகியோர், மாநகர காவல்துறை ஆணையர் சந்தோஷ்குமார் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலத்தில் ரூ.10 லட்சத்துக்கு சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என ஆணைய உறுப்பினர் வலியுறுத்தினார்.

சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ரூ.10 லட்சத்துக்கு விற்பனை செய்த வழக்கில், பெற்றோர் சதீஷ், சுமதி மற்றும் தொழிலதிபர் கிருஷ்ணன் ஆகியோரை சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் விசாரணை அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தார். அதில், இப்பிரச்சினையில் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து விசாரிக்க விசாரணை அமர்வு அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை அமர்வு அமைத்து உத்தரவிட்டுள்ளார். விசாரணை அமர்வில் ஆணையத்தின் உறுப்பினர்கள் ராமராஜ் மற்றும் மல்லிகை செல்வராஜ் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (23-ம் தேதி) விசாரணையைத் தொடங்கினர்.

மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், காவல் துணை ஆணையர் சந்திரசேகரன், சிறுமி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அலுவலராக செயல்பட்ட கூடுதல் துணை ஆணையர் குமார்ராஜா, சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்

பின்னர் உறுப்பினர் ராமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குழந்தை விற்கப்பட்டது தொடர்பான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடர்பான புகாரில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளது. விசாரணையில் நிறை, குறைகள் இருக்கிறது. இதில் தவறு எங்கு ஏற்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தயாரித்து இன்னும் ஒரு வாரத்தில் ஆணையத்தில் தாக்கல் செய்வோம்.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதற்காக குழந்தைகள் நலக் குழுமம், இளைஞர் நீதி குழுமம், சைல்டு லைன் அமைப்பு மூன்றையும் மேம்படுத்த வேண்டும். இந்த அமைப்புகள் செயல்பட தனியாக சட்டம் இயற்றிட மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஆணையம் பரிந்துரை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x