Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் முகவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்பதால் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் 20 சதவீதம் முகவர்களின் பெயர் களை கூடுதலாக வழங்க வேண்டும் என வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வரும் மே 2-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, வாக்கு எண்ணும் பணி எவ்வாறு பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 மையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதில், வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதிகளுக்கு வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி தொகுதி வாக்கு எண்ணிக்கை அங்குள்ள அரசு சட்டக் கல்லூரியிலும், கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம் தொகுதிகளுக்கு குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
முகவர்களுக்கு அறிவுரை
இதற்கான அடையாள அட்டை வேட்பாளர்களுக்கும் முதன்மை முகவர்களுக்கும் தனித்தனியாக வழங்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே, முகவர்கள் செல்போன் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். பேனா, பென்சில், குறிப்பேடு, வெள்ளைக் காகிதம் கொண்டு செல்லலாம்.
வாக்கு எண்ணிக்கை நடை பெறும் நாளில் அந்தந்த மையங் களில் காலை 6.30 மணிக்குள் முகவர்கள் ஆஜராக வேண்டும். காலை 7.30 மணியளவில் தேர்தல் அலுவலர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகள் திறக்கப்படும். முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜை பகுதியில் மட்டும் இருக்க வேண்டும். வேறு எங்கும் செல்ல அனுமதி இல்லை. முகவர்களுக்கு அந்தந்த கட்சி வேட்பாளர்களே உணவு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சைவ உணவுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை தொடர்ச்சி யாக நடைபெறுவதால் முகவர்கள் உணவு சாப்பிடுவதற்காக தனியாக நேரம் ஒதுக்கப்படாது. சுழற்சி முறையில் அவர்கள் சென்று சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.வாக்கும் எண்ணும் மையத் துக்குள் புகைபிடிக்க அனுமதி கிடையாது.
தபால் வாக்குகள்
வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண் ணிக்கை தொடங்கும். இந்தப் பணி முடிந்ததும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக குலுக்கல் முறையில் 5 வாக்குச் சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த வாக்குச்சாவடிக்கான விவிபாட் இயந்திரங்களில் பதி வான வாக்குகள் எண்ணப்படும். விவிபாட் இயந்திர வாக்குச் சீட்டுகளை வாக்கு எண்ணும் அறைகளில் உள்ள மேஜையில் நடைபெறும். விவிபாட் வாக்குகள் எண்ணும் பணி முடிந்த பிறகே இறுதி முடிவு தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும்.
கரோனா அறிவுரைகள்
தற்போது கரோனா இரண்டாம் அலை பரவல் வேகமாக இருப்பதால் தேர்தல் ஆணையம் வாக்கும் எண்ணும் மையத்துக்கு என பிரத்தியேக அறிவுரைகள் வழங்கியுள்ளது.இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வாக்கு எண்ணும் மையத்துக்குள் வரும் அனைத்து வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அனைவரும் முன்கூட்டியே கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இதற்கான வழிமுறைகள் அதற்கான நாள், இடம் ஆகியவை குறித்த தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாக வேட்பாளர்களுக்கு தெரிவிக்க உள்ளனர். முகவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந் தால் அவர்கள் விருப்பத்தின் பேரில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்ற உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே, வேட்பாளர்கள் தங்களுக்கு உரிய முகவர்களை நியமித்து கரோனா பரிசோதனை செய்ய அனுப்பும் போது, 20 சதவீதம் கூடுதலான நபர்களின் பெயர்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
வாக்கும் எண்ணும் மையத்தில் வேட்பாளர், முகவர், அரசு பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை வழங்கப்படும். வாக்கு எண்ணும் அறைகள் 3 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.
இதற்காக, தூய்மைப்பணியாளர்கள் தனியாக நியமிக் கப்படுவார்கள்’’ என தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT