Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

குண்டூர் எம்ஐஇடி பகுதியில் - கிரஷரிலிருந்து வரும் புகையால் மூச்சுத் திணறல் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருச்சி

திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே எம்ஐஇடியிலிருந்து நவல்பட்டு அண்ணாநகர் செல்லும் 100 அடி சாலையில் மல்லிகை நகர் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

மல்லிகை நகர் குடியிருப்பு பகுதிக்கு அருகே தனியார் கிரஷர் கம்பெனி இயங்கி வருகிறது.

இங்கு ஜல்லியை உடைத்து, தார் கலவை தயார் செய்யும்போது வெளிவரக்கூடிய தூசுகளும், புகையும் மல்லிகை நகர், அயன்புத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி முழுவதிலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறலையும் ஏற்படுத்துகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் முதியவர்களை சில நேரங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறும் குழாயின் உயரத்தை, தற்போது உள்ள நிலையிலிருந்து மேலும் சில மீட்டர் உயர்த்தினால் இப்பிரச்சினைக்கு குறைந்தபட்ச தற்காலிக தீர்வு கிடைக்கும். எனவே இப்பகுதி மக்களின் நலன்கருதி நல்ல தீர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x