Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM
மலேசியா, சிங்கப்பூர், ஓமன், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், கடந்த 2 மாதங்களில் கரோனா தொற்றுடன் 3 பயணிகள் வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் திருச்சிக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று காலை 180 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினர் சோதனை செய்தனர். இதில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பயணி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழுடன் விமானத்தில் பயணம் செய்து வந்தது தெரியவந்தது.
இதனால் மருத்துவக் குழுவினர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரோனா தொற்று ஏற்பட்டவருடன் பயணம் செய்த சக பயணிகளுக்கும் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT