Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

30 தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம்

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு மருத்துவமனைகள், ஆற்றுப்படுத்தும் மையங்கள் மற்றும் 30 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு மூச்சுக்காற்றின் மூலமும், இருமல், தும்மல் மற்றும் பேசும்போது வெளிப்படுகின்ற நீர்த்திவலைகள் மூலமும் பரவுகிறது. இந்நீர்திவலைகளில் 48 மணி நேரம் வரை வைரஸ் உயிரோடு இருக்கும்.

இந்நீர் திவலைகளை கைகளால் தொடுவதன் மூலம் வைரஸ் பரவி, அவர்களின் மூக்கு மற்றும் கண்களை தொடுவதன் மூலமாக நோய் தொற்று ஏற்படுகிறது. மேலும் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்கள், பேருந்துகள், ரயில்கள் மற்றும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் இந்நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சளி, இருமல், காய்ச்சல், உடற்சோர்வு, வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல், வாந்தி, போன்றவை கரோனா தொற்றுக்கான அறிகுறிகள். இவற்றுள் ஏதேனும் ஒன்று இருப்பின் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனையை அணுக வேண்டும்.

கரோனாவின் அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவமனையை அணுகி, சளி தடவல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்று உறுதியானால் உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பக்க விளைவுகள், மரணம் ஆகியவற்றை தவிர்க்கலாம்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, ஆத்தூர், எடப்பாடி, ஓமலூர் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆற்றுப்படுத்தல் மையங்கள்

கொண்டப்பநாயக்கன்பட்டி சாரோன் மருத்துவமனை ஆடிட்டோரியம், கருப்பூர் ஆண்கள் தங்கும் விடுதி, மணியனூர் சட்டக்கல்லூரி, கோரிமேடு சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, பெரிய கிருஷ்ணாபுரம் மாணவர் விடுதி, தம்மம்பட்டி அறிஞர் அண்ணா சமுதாயக் கூடம், மல்லூர் வேதவிகாஸ் பள்ளி ஆகியவை கரோனா ஆற்றுப்படுத்தல் மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

மேலும், சேலம் மாவட்டத்தில் 30 தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கரோனா தொடர்பான தகவலை மக்கள் பெற சேலம் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறையை 0427-2450498, 0427-2450022, 91541 55297, உதவி மைய எண்கள்: 104, 1077 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

கரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி மருத்துவமனைக்கு செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x