Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள்- சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது.
குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி என்ற பகுதியை பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் மன்னராக இருந்த போதிலும் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி காரணமாக தனது ஒரே மகளான சேரகுலவல்லியை ரங்கம் ரங்கநாதருக்கு திருமணம் செய்து வைத்தார்.
அன்று முதல் சேரகுலவல்லி, ரங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார். இவருக்கு பெரிய சன்னதியின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னதி உள்ளது.
குலசேகர ஆழ்வார், சேரகுலவல்லியை பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம். இதனால் ஆண்டுதோறும் ராமநவமி அன்று ரங்கம் கோயிலில் நம்பெருமாள்- சேரகுலவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ராமநவமி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார்.
பின்னர் நம்பெருமாள் சேரகுலவல்லி தாயாருடன் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை சேர்த்தி சேவை நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT