Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM
திருச்சியிலிருந்து சென்னைக்கு பேருந்தில் ஏறிச் செல்லும் அவசரத்தில், 2 வயது சிறுவனை பெற்றோர் திருச்சி பேருந்து நிறுத்தத்தில் மறந்து விட்டுச் சென்றனர். பின்னர், போலீஸாரால் மீட்கப்பட்ட சிறுவன், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ரங்கம் கொள்ளிடக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர், மண் தோண்டும் வேலைக்காக தனது மனைவி தனலட்சுமி, மகன் கதிர்வேல்(2) மற்றும் உறவினர்கள் 7 பேருடன் நேற்று சென்னைக்குப் புறப்பட்டார். இதற்காக, காலை 11 மணியளவில் ஒய் ரோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த அவர்கள், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தில் ஏறியபோது, அவசரத்தில் சிறுவன் கதிர்வேலை கீழேயே விட்டுவிட்டு, சென்றுவிட்டனர்.
இதனால், ஆதரவற்ற நிலையில் அழுதுகொண்டிருந்த சிறுவன் கதிர்வேலை, அங்கு பணியிலிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக நேரக் காப்பாளர் (டைம் கீப்பர்) மற்றும் பழ வியாபாரிகள் மீட்டு, கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக, சப் இன்ஸ்பெக்டர் மேகலா, தனிப்பிரிவு காவலர் சுரேஷ் உள்ளிட்டோர் அங்குசென்று, சிறுவனிடம் விசாரித்தபோது, பெயர் கதிர்வேல் என்பதைத் தவிர மற்ற விவரங்களை சிறுவனால் கூற முடியவில்லை.
இதையடுத்து, சிறுவனின் படத்தை சமூக வலைதளங்களில் பரவவிட்டு, பெற்றோரை கண்டறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மோகன் சென்ற பேருந்து திண்டிவனம் அருகே சென்றபோதுதான், சிறுவன் கதிர்வேல் உடன் இல்லாததை கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். உறவினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு இருக்கையில் அமர்ந்திருந்ததால், அடுத்தவரிடம் சிறுவன் இருப்பான் என நினைத்து, அனைவருமே கவனிக்காமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரங்கம் கொள்ளிடக்கரையிலுள்ள தனது உறவினர்களுக்கு செல்போனில் மோகன் தகவல் தெரிவித்தார். உடனடியாக, அவர்கள் ஒய் ரோடு பேருந்து நிறுத்தத்துக்குச் சென்று பார்த்தபோது, கொள்ளிடம் காவல் நிலையத்தில் சிறுவன் இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே, மோகன் உள்ளிட்டோர் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு, கொள்ளிடத்துக்கு திரும்பினர்.
பின்னர், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் வாயிலாக சிறுவன் கதிர்வேல், மோகனிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுவனை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த போலீஸார் உள்ளிட்ட அனைவ ருக்கும் மோகன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT