Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM
``கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1,605 படுக்கைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளன” என்று, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி போல்பேட்டையில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 12 வட்டாரங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்துக்கும் மூன்று நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த குழுக்கள் தினமும் மூன்று இடங்களில் காய்ச்சல் முகாமை நடத்தி வருகின்றன. மாநகராட்சியில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு 15 இடங்களில் காய்ச்சல் முகாமை நடத்துகின்றனர்.
கரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. கரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளும் சேமிக்கப்படுகின்றன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 700 படுக்கைகள் உள்ளன. இவைஅனைத்தும் ஆக்சிஜன் இணைப்புடன் கூடியவை. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 16 கேஎல்டி திறன் கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது.
கோவில்பட்டி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளில் 455 படுக்கைகள் தயாராக உள்ளன. எனவே, அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1,155 படுக்கைகள் உள்ளன.இதனை தவிர, தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கோவில்பட்டியில் லெட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பாதுகாப்பு மையங்களில் 450 படுக்கைகள் தயாராக உள்ளன.
கரோனா பாதிப்பு அதிக உள்ளவர்களை அரசு மருத்துவமனைகளிலும், லேசான அறிகுறிகள் உள்ளவர்களை கரோனா பாதுகாப்பு மையங்களிலும், அறிகுறிஇல்லாதவர்களை வீட்டு தனிமையில் வைத்தும் கண்காணித்து வருகிறோம்.
ஒரு வீட்டில் யாருக்காவது கரோனா இருந்தால் அந்த பகுதி நுண் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் பரிசோதனை செய்யப்படும். இந்த பகுதியில் கரோனா நோயாளி யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே கட்டுப்பாட்டு பகுதி நீக்கப்படும்.
கரோனா தடுப்பு நெறிமுறைகளை மீறுவோருக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மட்டும்ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்க பல்வேறு துறை அதிகாரிகளை கொண்ட 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதபோல் இரவு நேரஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர். ஆய்வின் போது மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT