Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் - சமயபுரம் கோயில் உட்பிரகாரத்தில் நடைபெற்ற சித்திரை தேரோட்டம் :

திருச்சி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் இன்றி கோயில் உட்பிரகாரத்திலேயே சித்திரைத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா ஏப்.11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினந்தோறும் அம்பாள் புறப்பாடு நடைபெற்று கோயிலின் 2-ம் பிரகாரத்திலேயே உலா வந்து அபிஷேக மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், கோயில் உற்சவங்களில் பக்தர்கள் பங்கேற்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இத்திருவிழாவின் முக்கிய உற்சவமான சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை முடிந்து மரக்கேடயத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்று, கோயில் 2-ம் பிரகாரத்தை வலம் வந்து அபிஷேக மண்டபத்தை சேர்ந்தார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு அம்பாள் வசந்த மண்டபத்திலிருந்து வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பட்டு, கோயில் 2-ம் பிரகாரத்தை சுற்றி வந்து அபிஷேக மண்டபத்தை சேர்ந்தார். பின்னர் அர்த்த ஜாம பூஜை நடைபெற்றது.

இந்த விழாவில், கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள், 4 கிராம முக்கியஸ்தர்கள் மட்டும் பங்கேற்றனர்.

கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக சித்திரை தேரோட்டம் தேரோடும் வீதிகளில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x