Published : 20 Apr 2021 03:16 AM
Last Updated : 20 Apr 2021 03:16 AM
மத்திய அரசின் விவசாய (கிசான்) நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து உழவர் பேரவை சார்பில் தி.மலை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று நூதனப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “விவசாயத் தேவைக்கு பயன்படுத்தப் படும் உரம் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. டிஏபி ரூ.700-ம் மற்றும் பொட்டாஷ், யூரியா ஆகியவை தலா ரூ.300 என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஓர் ஏக்கர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.1,500 செலவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (கிசான் திட்டம்) ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் (3 தவணை) வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் ஊழல் செய்த அதிகாரிகளால், உண்மையான விவசாயிகள் பாதித்துள்ளனர். 3 தவணையாக வழங்க வேண்டிய ரூ.6 ஆயிரத்தை உடனடியாக வழங்கினால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
உரம் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய முடியும். உரம் மானியத்தொகையை ரூ.75 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1.10 லட்சம் கோடியாக மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். மண் வளத்தையும், உடல் நலனையும் பாதுகாக்க இயற்கை உரங்களுக்கு விவசாயிகளை ஊக்கப்படுத்தி கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார்.
இதையடுத்து அவர்கள், 2 ஆயிரம் ரூபாய் தாள்களின் மாதிரிகளை வீசி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.இதில், மாவட்டச் செயலாளர் சிவா மற்றும் விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT