Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM
விருதுநகர் மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு ஆண்டில் பல்வேறு பணிகளுக்காக நபார்டு வங்கி ரூ.8,668 கோடி ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நபார்டு வங்கி துணைப் பொதுமேலாளர் ராஜா சுரேஷ்வரன் கூறியதாவது: 2021-22 நிதியாண்டுக்கு இம் மாவட்டத்துக்கான வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்துக்கான கடன் மதிப்பீடு ரூ. 8,668.64 கோடி. கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்கீழ் நபார்டு வங்கி மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் 24 திட்டங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளது.
ஊரகச் சாலைகள், சிறு பாலங்கள், பள்ளிக் கட்டிடங்கள், கால்நடை மருத்துவமனைகள், தடுப்பணைகள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் மீன் விதைப் பண்ணைகள் ஆகியவற்றின் கட்டுமானத்துக்கு ரூ. 31 கோடி அளித்துள்ளது. மேலும், 168 புதிய கிராம உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ. 22 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு குறுகிய காலச்செயல்பாடுகளுக்காக ரூ.119 கோடியும், நீண்டகால விவசாயச் செயல்பாடுகளுக்கு ரூ.6.7 கோடி மறு நிதியுதவியாக நபார்டு வங்கி வழங்கி உள்ளது.
அதேபோல, தமிழ்நாடு கிராம வங்கிக்கு மாவட்ட அளவில் ரூ. 176 கோடி மறு நிதியுதவி வழங்கி உள்ளது. அதோடு, இம்மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பகுதிகளில் நீர்ச்செறிவு மேம்பாட்டுத் திட்டங்கள், காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகாணுதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை மட்டுப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
சுயஉதவிக் குழுக்கள், வங்கி யாளர்களுடன் கலந்துரையாட குழுக்கள் வங்கிகளுக்கு பட்டறிவு பயணம் மேற்கொள்ள ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 325 கூட்டு பொறுப்புக் குழுக்கள் தொடங்கவும், அவற்றுக்கு ரூ.9.24 கோடி கடன் வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மகளிர் திட்டம் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு இ- சக்தி திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். தற்போது, 5,863 சுய உதவிக் குழுக்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 89 சதவீத நிலம் சிறு, குறு விவசாயிகளால் கையாளப்படுகிறது. இந்த சிறு, குறு விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, 8 விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடங்க நிதியுதவி அளித்துள்ளோம்.
மத்திய அரசு அறிவித்த 10 ஆயிரம் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் திட்டத்தின்கீழ், சாத்தூர் ஒன்றியத்தில் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் ஒன்றையும் நபார்டுவங்கி தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT