Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM

வேலூர் மாவட்டத்தில் விரைவில் - கரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையம் : மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் விரைவில் சித்த மருத்துவ முறையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம் தொடங்கப்படவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கரோனா பரவல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதேபோல், கரோனா தொற்று ஏற்பட்டு உடல் ஆரோக்கியமாக இருப்பவர்களை தரம் பிரித்து சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற் படுத்தப்பட்டன.

அதன்படி, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேலூரில் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குடியாத்தம் அபிராமி கல்லூரியிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

இந்த இரண்டு மையங் களிலும் ஏறக்குறைய 5 ஆயிரம் பேர் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நாளடைவில் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த சிறப்பு சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன.

கரோனா இரண்டாம் அலை

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதம் இறுதியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1000-ஐ கடக்கும் என எதிர்பார்த்த நிலையில் நேற்றைய நிலவரப்படி 1300-ஐ கடந்து சென்றுவிட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்க வசதியாக 2 ஆயிரம் படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

அதேபோல், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மூலமாக சிகிச்சை அளிக்க வசதியாக 1,500-க்கும் அதிகமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சித்த மருத்துவ சிகிச்சை

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சை முறையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. இங்கு தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க உள்ளனர். இந்த மையம் ஒரு வாரத்தில் செயல்பட தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சித்த மருத்து வர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ள விருப்பம் தெரி வித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை மையங்களில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களுக்கு தினசரி கபசுர குடிநீருடன் அமுக்ரான் மாத்திரை, தாளிசாதி வடகம், பிரம்மாணந்த பைரவ மாத்திரை, ஆடாதோடா மனப்பாகு உள்ளிட்டவற்றை கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குணமடைந்து வீடு திரும்பிய வர்கள் குறித்த ஆராய்ச்சி அறிக்கை மத்திய, மாநில அரசு களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது, கரோனா இரண்டாம் அலை தொடங்கி உள்ளதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆட்சியர் உத்தரவு

எனவே, மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சை முகாமை திறக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இந்தமுறை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் அமையவுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் தொடங்க உள்ளோம். இதற்கான ஆலோசனை மாவட்ட ஆட்சியர் தலைமையில் திங்கட்கிழமை (நாளை) நடைபெற உள்ளது. இதில், எந்தவிதமான மருந்து மாத்திரைகளை வழங்குவது, எப்போது முகாம் செயல்பட ஆரம்பிக்கும் என்ற முடிவுகள் எடுக் கப்படவுள்ளது’’ எனதெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x