Published : 17 Apr 2021 03:15 AM
Last Updated : 17 Apr 2021 03:15 AM
சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பார்த்திபன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலம் மாநகராட்சியில் பணியாற்றி வருகிறார். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (16-ம் தேதி) இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான போலீஸார் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘மதுரை மாநகராட்சியில் நகர்நல அலுவலராக பார்த்திபன் பணியாற்றிய போது, 2017- 2018-ம் ஆண்டுகளில் மருந்துகள் வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரின் பேரில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர் நடவடிக்கையாக, சேலத்தில் நகர் நல அலுவலர் பார்த்திபன் வீட்டில் சோதனை நடந்தது,’ என்றனர்.
மதுரை மாநகராட்சியில் நடந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள், ரசீதுகள் உள்ளனவா என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT