Published : 17 Apr 2021 03:15 AM
Last Updated : 17 Apr 2021 03:15 AM
சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படும் நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில் திருவிழாக் கள், கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்படுவது ஏன் என நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரோனா கட்டுப்பாடுகளால் தொழில் இன்றி வாழ்வா தாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளதாகவும், வாழ்வாதாரத்துக்கு அரசு உடனே உதவுவதுடன், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு நாடக- நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தினர் 30-க்கும் அதிகமானோர் நேற்று மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்ய தர்ஷினியிடம் மனு அளித்தனர்.
முன்னதாக, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக 3,000 பேரும், பதிவு செய்யாத 12,000-க்கும் அதிகமானோரும் உள்ளனர். கோயில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
கடந்தாண்டு கரோனா ஊரடங் கால் தொழில் இன்றி, கடன் வாங்கி கடும் போராட்டத்துக்கு இடையே வாழ்க்கை நடத்தினோம். இதனிடையே, கரோனா கட்டுப் பாடுகள் தளர்வு அறிவிக்கப்பட்டு, தற்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக தற்போது மீண்டும் திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.
மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர் களின் எண்ணிக் கைக்கு கட்டுப் பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்தாண்டு வாங்கிய கடனைக் கூட அடைக்க முடியாமலும், வாழ்க்கையை நடத்த முடியா மலும் பல்வேறு வழிகளில் சிரமத் துக்குள்ளாகியுள்ளோம்.
தற்போது, சினிமா சூட்டிங், சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள், உணவகங்கள் என பல்வேறு தொழில்கள் கட்டுப் பாடுகளுடன் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில், கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஏன் என தெரிய வில்லை.
எனவே, நேரக்கட்டுப்பாடுடன் திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
இல்லையெனில், கட்டுப்பாடு கள் அகற்றப்படும் வரை பதிவு பெற்ற, பதிவு செய்யாத நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 வீதம் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT