Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைபிடித்து, காந்தி மார்க்கெட்டிலேயே வெவ்வேறு நேரங்களில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, மாநிலம் முழுவதும் காய்கனி வணிக வளாகங்களில் சில்லறை வணிகத்துக்கு ஏப்.10-ம் தேதி முதல் தடை விதித்து கடந்த 8-ம் தேதி அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஏப்.11-ம் தேதி முதல் சில்லறை வணிகம் நடைபெறாது என்றும், சில்லறை வியாபாரிகளுக்கு ஜி கார்னர் மைதானத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
மேலும், கழிப்பிடம், குடிநீர், மின்விளக்கு ஆகிய வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் அமைத்துத் தரப்பட்டன.
ஆனால், இதுவரை காந்தி மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் யாரும் ஜி கார்னர் மைதானத்துக்கு செல்லவில்லை.
இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைபிடித்து, காந்தி மார்க்கெட்டிலேயே வெவ்வேறு நேரங்களில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அந்தச் சங்கத்தின் தலைவர் வி.கோவிந்தராஜூலு தெரிவித்துள்ளது:
மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் இரு வேறு இடங்களில் நடைபெறுவதில் எரிபொருள் செலவு, கால விரயம், குறிப்பிட்ட அளவுக்கு மேல் காய்கறிகளை வாங்கிச் செல்ல இயலாத நிலை என பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஓரிடத்தில் மொத்த விற்பனை நடைபெறும்போது, மற்றொரு இடத்தில் சில்லறை வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.
எனவே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, காந்தி மார்க்கெட்டிலேயே இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 5 மணி முதல் காலை 11 மணி வரை சில்லறை வியாபாரமும் செய்ய மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT