Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் - இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு அனுமதி :

பெரம்பலூர்

பெரம்பலூரில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும தலைவர் அ.சீனிவாசன் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் செயல்பட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தேசிய மருத்துவமனைகள் ஆணையத்தின் தரச் சான்றிதழ் (NABH) பெற்று செயல்பட்டுவருகிறது. இம்மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் புறநோயாளிகளும், 50 ஆயிரம் உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2017 முதல் செயல்பட்டு வரும் இதயநோய் சிகிச்சை பிரிவில் இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 13,000-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இதுவரை 5,000 ஆஞ்ஜி யோகிராம் பரிசோதனைகளும், 1,850 ஆஞ்ஜியோ பிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சைகளும், 550 இதய பைபாஸ் அறுவைசிகிச்சைகளும், 325 வால்வு மாற்று அறுவைசிகிச்சைகளும் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மருத்துவமனையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு இதய நோயாளிகள் முன்பதிவு செய்து கொண்டு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றார்.

அப்போது, கல்விக் குழும செயலாளர் நீல்ராஜ், மருத்துவக்கல்லூரி முதல்வர் மரகதமணி இளங்கோவன், இதய நோய் சிகிச்சை மற்றும் அறுவைசிகிக்சை சிறப்பு மருத்துவர்கள் கணேஷ், ரகுநாதன், ஆஷிக், ரியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x