Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோடை மழை :

சேலம் / கிருஷ்ணகிரி

சேலத்தில் கடந்த இரு நாட்களாக கோடை மழை பெய்ததால், வெயில் உஷ்ணம் சற்று தணிந்தது.

தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த வாரத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் தாக்கம் நிலவியது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் சேலம் மாவட்டத்தில் வெயில் நீடித்து வரும் நிலையில், கடும் உஷ்ணத்தால், பகல் நேரத்தில் சாலைகளில் அனல் காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது. நேற்று முன்தினம் மாலை சேலம் உட்பட மாவட்டத்தின் பல ஊர்களில் திடீரென குளிர்ந்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. நேற்று காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் மதியம் திடீரென மழை பெய்தது.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: எடப்பாடி 78 மிமீ, மேட்டூர் 32, ஆணைமடுவு 13, ஏற்காடு 5.4, சங்ககிரி 3, சேலம் 0.8 மிமீ மழை பதிவானது.

சூளகிரியில் இடியுடன் மழை

சூளகிரி பகுதியில் நேற்று பிற்பகலில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பரவலாக அவ்வபொழுது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சூளகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியம் 2 மணியளவில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. திடீர் மழையால், வெப்பம் தணிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், ஆலங்கட்டி மழையால், மாமரங்களில் பிஞ்சுகள் உதிர்ந்து, கீழே விழுந்தன. ஏற்கெனவே தக்காளி விலை வீழ்ச்சியால் தோட்டத்தில் அறுவடை செய்யாமல் இருந்த தக்காளி பழங்கள், ஆலங்கட்டி மழையால் வீணானது என விவசாயிகள் தெரிவித்தனர்.

நீர்மட்டம் சரிவு

கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளள வான 52 அடியில் 39.30 அடிக்கு தண்ணீர் இருந்தது. நீர்வரத்து முற்றிலும் இல்லை. அணையில் இருந்து விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. 2-ம் போக சாகுபடிக்காக வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்களில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

ஓசூரில் சாரல் மழை

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் குளிர்ந்த காற்றுடன் மழை பொழிவதற்கான சூழல் நிலவியது.

மதியம் 12 மணிக்குப் பிறகு வானில் கார் மேகம் திரண்டு மழை வருவதற்கான அறிகுறியாக பலத்த காற்று வீசியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது.

மத்திகிரி, கெலமங்கலம், பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

மழையினால் ஓசூர் நகரில் நிலவி வந்த வெப்பமான சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு நகரப்பகுதி குளிர்ந்த நிலைக்கு மாறியது. இதனால் மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டியில் 16 மிமீ மழை

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நேற்று முன் தினம் இரவு 11 மி.மீட்டர் மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை முதலே வானில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. குளிர்ந்த காற்றும் வீசத் தொடங்கியது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான தூறல் விழத் தொடங்கியது. இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அன்று 16 மி.மீட்டர் மழை பதிவானது. கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த மழையால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.நேற்று மதியம் பெய்த சாரல் மழையின்போது, சேலம் திருவள்ளுவர் சிலை அருகே குடைபிடித்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x