Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM
மறைந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 130-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டலத்தில் அவரது சிலை, படங்களுக்கு அதிமுக, திமுக உட்பட அனைத்து அரசியல் கட்சியினர், அமைப்பினர் நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.இந்திரஜித், தந்தை பெரியார் தி.க மாவட்டத் தலைவர் பூவை ஜெகந்நாதன், தி.க மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி ஆர்.சோமு, விசிக மாநகர் மாவட்டச் செயலாளர் அருள், தேமுதிக மாநகர் மாவட்டச் செயலாளர் டி.வி.கணேஷ், தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ரமணா ஆகியோர் தலைமையில், அந்தந்த கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையிலும், வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் அமைச்சர் எஸ்.வளர்மதி உள்ளிட்டோரும் அம்பேத்கர் படங்களுக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.
திருச்சி தில்லைநகரிலுள்ள திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு, மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் க.வைரமணி தலைமையில் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், வேட்பாளர்கள் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், தென்னலூர் பழனியப்பன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பெல் நிறுவன பொது மேலாளரும், தலைவருமான டி.எஸ்.முரளி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
திருவெறும்பூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், அரியலூரில் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், காரைக்காலில் அரசு சார்பில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
இதேபோல, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலை, படங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT