Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

சேலம் மாநகராட்சி பகுதியில் 100 பேருக்கு மேல் இருந்தால் - இருப்பிடத்திற்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம் :

சேலம் அம்மாப்பேட்டை செல்வநகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க வளாகத்தில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதனை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டார். உடன் மாநகர் நல அலுவலர் பார்த்திபன்.

சேலம்

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சி பகுதியில், குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அதிக ஊழியர்களைக் கொண்டு செயல்படும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்களை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.

அம்மாப்பேட்டை மண்டலத் தில், செல்வநகர் வீட்டு உரிமை யாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க வளாகத்தில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில், 300 நபர்களுக்கு, நேற்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவக வளாகத்தில் தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 150 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும்குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வங்கி அலுவலர்கள் மற்றும் தனியார் காபி நிறுவன ஊழியர்கள் 450 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியதாவது:

சேலத்தில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில், ஒரே நாளில் 900 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் 45 வயதுக்கு மேற்பட்டவர் களின் எண்ணிக்கை 100 பேருக்கு மேல் இருந்தால், அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கரோனா தடுப்பூசி போடப்படும். இந்த வசதியினை பயன்படுத்திக்கொள்ள சேலம் மாநகராட்சி கரோனா கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜோசப் என்பவரை 75981 30884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில், சேலம் மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் சண்முக வடிவேல், டாக்டர் முகமது முஸ்தாபா, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சித்தேஸ்வரன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உழவர் சந்தைகளில் முகாம்

சேலத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும் இடமான உழவர் சந்தைகளிலும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இங்கு காலை 6.30 மணி முதல் காலை 9 மணி வரை தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உழவர் சந்தைக்கு வந்து செல்லும் விவசாயிகள், பொதுமக்கள், உழவர் சந்தைக்கு அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்கள் ஆதார் கார்டை காண்பித்து, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதனிடையே, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x