Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து முதல்வர் பழனி சாமி கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறில் மட்டும் பிரச்சாரம் செய்திருந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரவில்லை. அதுபோல கூட்டணி தலைவர்களில் ஜி.கே.வாசன் மட்டுமே பிரச்சாரம் செய்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தபோதிலும், தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரவில்லை. அதுபோல பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இம்மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக கூட்டணியில் வேட்பாளர்கள் மட்டுமே தீவிர பிரச்சாரம் செய்தனர்.
திமுக கூட்டணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6 வேட்பாளர்களையும் ஆதரித்து தூத்துக்குடியில் வைத்து ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்தார். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி ஆகியோர் மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்தனர்.
கூட்டணி தலைவர்களை பொறுத்தவரை வைகோ, தங்கபாலு, திணேஷ் குண்டுராவ், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.
அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தேமுதிகவைச் சேர்ந்த விஜய பிரபாகரன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். அதுபோல நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் பெ.கீதாஜீவன் நேற்று காலை போல்பேட்டை போத்தி விநாயகர் கோயில் முன்பிருந்து பிரச்சாரத்தை தொடங்கி, அண்ணாநகர் 7-வது தெரு சந்திப்பில் மாலை 7 மணிக்கு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
அதுபோல அதிமுக கூட்டணியின் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் 3-ம் மைல் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி, வி.இ.சாலையில் நிறைவு செய்தார். தேமுதிக வேட்பாளர் சந்திரன், சமக வேட்பாளர் சுந்தர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ் ஆகியோரும் நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரம் செய்தனர்.
திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து, இறுதியாக திருச்செந்தூர் காமராஜ் சிலை முன்பு நிறைவு செய்தார். அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் ஆறுமுகநேரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அமமுக வேட்பாளர் வடமலை பாண்டியன், சமக வேட்பாளர் ஜெயந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குளோரியான் ஆகியோரும் நேற்று இறுதிகட்ட ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.
வைகுண்டம்
இதேபோன்று கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளிலும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT