Published : 04 Apr 2021 03:17 AM
Last Updated : 04 Apr 2021 03:17 AM

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் - மாநில அளவில் வேலூர் மாவட்டம் மூன்றாமிடம் : பொது இடங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்தல்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 90,093 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டம் மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரத்து 38 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 21 ஆயிரத்து 532 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 20 ஆயிரத்து 971 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றுக்கு 354 பேர் உயிரிழந் துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நோய்த் தொற்றில் இருப்பவர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன. மேலும், காய்ச்சல் முகாம்கள் அதிகளவில் நடத்தப்பட்டதுடன் அரசு மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் வசதி களுடன் கூடிய படுக்கை வசதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டது. அதேபோல், பொது இடங் களில் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற் படுத்தியதுடன் அபராதம் விதித்து வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி முகாம்

தன்னார்வ தொண்டு அமைப்பு களுடன் இணைந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதுடன் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப் பட்டு வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 23 ஆயிரத்து 747 சுகாதாரப் பணியாளர்கள், 12 ஆயிரத்து 118 முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 7 ஆயிரத்து 31 பேர், பொதுமக்கள் 47 ஆயிரத்து 197 பேர் என மொத்தம் 90 ஆயிரத்து 93 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநில அளவில் அதிகபட்ச கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட் டங்களில் மூன்றாமிடத்தில் வேலூர் மாவட்டம் உள்ளது.

கரோனா தொற்று பரவும் வேகம் கடந்த 2020 ஜூலை மாதம் 26.5 சதவீதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து 2021 பிப்ரவரி மாதம் முழுவதும் 1 சதவீத்துக்கும் கீழே அதாவது 0.5 சதவீதமாக இருந்தது.மார்ச் முதல் மூன்று வாரங்களில் மூன்று மடங்கு உயர்ந்து தற்போது, 1.6 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிக பட்சமாக 4 ஆயிரத்து 976-ஆக இருந்தது. ஒவ்வொரு மாதமும் படிப்படியாக குறைந்து கடந்த பிப்ரவரி மாதம் 228-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 30 நாட்களில் 527-ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் இரண்டு நாட்களில் மட்டும் 72 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவு வதற்கு குறைந்த நாட்களே எடுத்துக்கொள்கிறது.

இதே நிலை தொடர்ந்தால், வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும் என அஞ்சப் படுகிறது.

எனவே, நோய்த் தொற்றில் இருந்து தப்பிப்பதற்கு 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறை யினர் அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் இருப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் தினசரி 75 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த நிலவேம்பு குடிநீரை 5 நாட்களுக்கு குடிக்க வேண்டும். வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகளை தினசரி ஒன்று என்ற விகிதத்தில் 10 நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை, நொச்சி இலை, இஞ்சி, வேப்பிலை, யூக்கலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை கலந்து தினசரி ஆவி பிடிக்க வேண்டும்.

தொண்டையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பாறை உப்பை (இந்து உப்பு) சுடுநீரில் கலந்து கொப்புளிக்க வேண்டும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x