Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.5.34 லட்சம் பறிமுதல் :

சேலம்

சேலத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.5.34 லட்சம் பறிமுதல் செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

சேலம் கொண்டலாம்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி, சோதனை செய்ததில் தங்கவேல் என்பவர் ரூ.3.53 லட்சம் வைத்திருந்தார். தங்கவேல் லாரி தொழில் செய்வதாகவும், அதற்கான பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். எனினும் உரிய ஆவணமில்லாததை அடுத்து, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் நரசோதிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது, கார்த்திகேயன் என்பவரது இருசக்கர வாகனத்தில் ரூ.52 ஆயிரத்து 50 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உணவு விடுதி நடத்தி வரும் கார்த்திகேயன் பணத்துக்கான உரிய ஆவணமில்லாமல் கொண்டு சென்றதை அடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

சேலம் தாதகாப்பட்டி கேட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், மருந்து கடை நடத்தி வரும் கணேசன் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.59 ஆயிரத்து 280 பறிமுதல் செய்தனர்.

ஓமலூர் அருகே பாகல்பட்டியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த திருநாவுக்கரசு , உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.70 ஆயிரத்து 350 அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 680-யை அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பட்டு சேலைகள் பறிமுதல்

ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தாத்தியம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்த முயன்ற போது, நிற்காமல் வேகமெடுத்து சென்றது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் வாகனத்தை 8 கி.மீ., தொலைவு துரத்தி சென்று பிடித்து சோதனை செய்தனர்.

அந்த வாகனத்தில் 8 பண்டல்களில் ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 228 பட்டு சேலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு உரிய ஆவணமில்லாத நிலையில், பட்டு புடவைகளை பறிமுதல் செய்ய தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x