Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM
சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணம் இல்லாத ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்து 110 பறிமுதல் செய்யப்பட்டது.
ஆத்தூர் அடுத்த மல்லியக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி நடராஜன் என்பவர் வந்த லாரியில் சோதனை நடத்தியபோது, உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.3.91 லட்சம் மற்றும் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ராஜேந்திரன் என்பவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.54 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கெங்கவல்லி தெடாவூர் பிரிவுச் சாலையில் நடந்த சோதனையில், காட்டுக்கோட்டை தனியார் ஏஜென்சி விற்பனை பிரதிநிதி நரேஷ்குமார் என்பவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 990, தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி பிரிவுச் சாலையில் அப்பாம்ம சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.93,160 பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேஷ்குப்தா என்பவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.53,500, அன்னதானப்பட்டி பகுதியில் ராமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.53,290, கிச்சிப்பாளையம் பகுதியில் வஉசி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.51,170 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடந்த தணிக்கையில், ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்து 110 பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல்லில் ரூ.8.11 லட்சம்
நாமக்கல் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர்களின் வாகனத் தணிக்கையில்அவ்வழியாக வந்த லாரியில் ஓட்டுநர் மணிராஜ் ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.4.81 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுபோல, சேந்தமங்கலம் அடுத்த கல்குறிச்சியில் தேர்தல் பிரிவு அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் நடந்த தணிக்கையில், நாமக்கல் ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் வந்த லாரியில் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.3.30 லட்சம் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT