Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் - 1,695 காவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர் : ஆட்சியர் சிவன் அருள், ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு

நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் காவலர்கள் தபால் வாக்கு செலுத்துவதை நேற்று ஆய்வு செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், எஸ்.பி., டாக்டர் விஜயகுமார் ஆகியோர். அடுத்த படம்: அரக்கோணத்தில் காவல் துறையினர் தபால் வாக்குகள் செலுத்தும் பணியை நேற்று ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார்.

திருப்பத்தூர்/ராணிப்பேட்டை

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 1,695 காவலர்கள் தங்களுக்கான தபால் வாக்குகளை நேற்று செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வரு கின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வருவாய்த் துறையினர், பள்ளி கல்வித்துறையி னர், ஊரக வளர்ச்சித்துறையினர், காவல் துறையினர் தங்களது வாக்கு களை தபால் மூலம் செலுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பள்ளி கல்வித்துறையினர் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் தங்களுக்கான தபால் வாக்குகளை நேற்று செலுத்தினர். திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 158 காவலர்கள் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்குகளை செலுத்தினர்.

அதேபோல, ஜோலார்பேட்டை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 219 காவலர்கள் நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திலும், வாணியம்பாடி தொகுதியில் பணியாற்ற உள்ள 222 காவலர்கள் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆம்பூர் தொகுதியில் பணியாற்ற உள்ள 338 காவலர்கள் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது தபால் வாக்குகளை நேற்று செலுத்தினர். இதற்கான அந்தந்த வட்டாட்சியர் அலுவல கத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் தபால் வாக்குகளை செலுத்துவதை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய குமார், சார் ஆட்சியர் வந்தனா கர்க் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் (தனி) தொகுதியில் 48 பேர், சோளிங்கர் தொகுதியில் 101 பேர், ராணிப்பேட்டை தொகுதியில் 150 பேர், ஆற்காடு தொகுதியில் 151 பேர், பிற மாவட்டங் களைச் சேர்ந்த 308 பேர் என மொத்தம் 758 காவல் துறையினர் தபால் வாக்குகள் அளிக்க விண்ணப்பங் களை பெற்றிருந்தனர். இவர்களுக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. ராணிப்பேட்டை உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவல் துறையினர் ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு மையத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள காவலர்கள் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மையத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் ஆய்வு செய்தார். அப்போது, கூடுதல் காவல் கண் காணிப்பாளர் முத்துகருப்பன், துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) ரூபன் ஆகியோர் உடனி ருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x