Published : 29 Mar 2021 03:17 AM
Last Updated : 29 Mar 2021 03:17 AM

வாக்காளர்கள் பயன்படுத்தும் - கையுறைகளை அப்புறப்படுத்த தனி வாகனங்கள் ஏற்பாடு :

தூத்துக்குடி

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பயன்படுத்தும் கையுறைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6-ம் தேதி கரோனா காலத்தில் நடைபெறுவதால் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களின் பாதுகாப்புக்காக 6 முகக்கவசங்கள், கையுறை, முழு முககவசம் (பேஸ்ஷீல்டு) மற்றும் கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

வாக்குச்சாவடிக்கு வாக் களிக்க வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகு வலதுகையில் அணியும் வகையில் பாலித்தீன் கையுறை வழங்கப்படும். அதை அணிந்து சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க வேண்டும். பின்னர் கையுறையை அங்கு வைக்கப்பட்டிருக்கும் பையில் பாதுகாப்பாக போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை கவனிக்க ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 2,097 வாக்குச்சாவடிகளுக்கு 4,194 கட்சி சாராத இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வாக்காளர்கள் பயன்படுத்திய கையுறைகள் தனியாக ஒரு பையில் சேகரித்து வைக்கப்படும். இதனை அப்புறப்படுத்த தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தனியாக 62 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று, உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து கையுறைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அந்தந்த தாலுகா தலைமை அரசு மருத்துவமனைகளில் கொண்டு சேர்க்கப்படும். அங்கிருந்து மருத்துவக் கழிவுகளை அழிக்கும் நிறுவனம் மூலம் எடுத்து சென்று அழிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x