Published : 26 Mar 2021 03:17 AM
Last Updated : 26 Mar 2021 03:17 AM

ஆரணி மாவட்டம் உருவாக துணை போனதாக கூறி - செய்யாறு அதிமுக வேட்பாளருக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் : ஜெயலலிதா வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு

செய்யாறு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தூசி கே.மோகனுக்கு எதிராக, அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள கண்டன சுவரொட்டிகள்.

திருவண்ணாமலை

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக் காமல் செயல்பட்ட தூசி கே.மோகன் எம்எல்ஏவை கண்டித்து செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி யில் அதிமுக சார்பில் தூசி கே.மோகன் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், செய்யாறு தொகுதியில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கண்டன பேரணி மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுகவினர், தூசி கே.மோகனை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மேலும் அவர்கள், தூசி கே.மோகன் போட்டியிட்டால், செய்யாறு தொகுதியில் அதிமுக வெற்றி பெறாது என ஆரூடம் கூறினர். அவர்களது போராட்டத்தை கட்சியின் தலைமை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, தூசி கே.மோகனும் மனு தாக்கல் செய்து களத்தில் உள்ளார். அவருக்கு எதிரான போராட்டம், சற்று தணிந்திருந்த நிலையில், ‘புதிய மாவட்டம்’ வடிவில் மீண்டும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

இந்நிலையில், ஆரணியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரனை ஆதரித்து, கடந்த 21-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி, ‘அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும், திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்’ என உறுதி அளித்துள்ளார். அவரது அறிவிப்பு, ஆரணி தொகுதியில் போட்டியிடும் சேவூர் எஸ்.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக அமைந் தாலும், செய்யாறு தொகுதியில் போட்டியிடும் தூசி கே.மோகன் தலையில் இடியாக விழுந்தது.

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக் கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வந்த தூசி கே.மோகனுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர். அவரை கண்டித்து, செய்யாறு தொகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

செய்யாறு மாவட்டத்தை உருவாக்கிட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கிட துணை போன தூசி கே.மோகனை கண்டிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளால், செய்யாறு தொகுதி யில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x