Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல், உடல்வலி ஏற்பட்டால் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தற்காலிக வஉசி பூ மார்க்கெட்டில் கரோனா தடுப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்த பயணிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆணையர் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிப்பதின் அவசியம், முகக் கவசம் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:
பிற மாநிலங்களில் கரோனா தொற்று அதிகளவு பரவி வரும் நிலையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும், வணிக ரீதியான போக்குவரத்தையும் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் கட்டாயம் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாருக்கேனும் காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் உடனடியாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை 0427 - 2212844, சூரமங்கலம் மண்டல அலுவலகம் 0427 - 2387514, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் 0427 - 2310095, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகம் 0427 - 2263161, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் 0427- 2216616 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 120 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, கரோனா தொற்று பரவியுள்ளவர்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் சண்முகவடிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT