Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM
சேலம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி முகாம் நடந்தது. தொகுதி வாரியாக பயிற்சியை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,003 துணை வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட மொத்தம் 4,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் தலா 5,136 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் (நிலை–1, 2, 3) உள்ளிட்ட மொத்தம் 20,544 பேர் பணிபுரிய உள்ளனர். வாக்குச்சாவடிகளில் பணிபுரிபவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.
இதன்படி, கெங்கவல்லி (தனி) தொகுதியில் பணிபுரிய வுள்ள 1,601 பேருக்கு தேவியாக்குறிச்சியிலும், ஆத்தூர் (தனி) தொகுதியில் பணிபுரியவுள்ள 2,151 பேருக்கு ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஏற்காடு (எஸ்டி) தொகுதியில் பணிபுரியவுள்ள 2,250 பேருக்கு அயோத்தியாப்பட்டணம் தனியார் கல்லூரியிலும், ஓமலூர் தொகுதியில் பணிபுரியவுள்ள 2,612 பேருக்கு கருப்பூர் தனியார் கல்லூரியிலும் நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது.
இதேபோல, மேட்டூர் தொகுதியில் பணிபுரியவுள்ள 1,992 பேருக்கு புதுச்சாம்பள்ளி தனியார் பள்ளியிலும், எடப்பாடி தொகுதியில் பணிபுரியவுள்ள 2,170 பேருக்கு கொங்கணாபுரம் தனியார் பள்ளியிலும், சங்ககிரி தொகுதியில் பணிபுரியவுள்ள 1,766 பேருக்கு புள்ளிபாளையம் தனியார் கல்லூரியிலும், சேலம் மேற்கு தொகுதியில் பணிபுரியவுள்ள 1,154 பேருக்கு சேலம் தனியார் தொழில்நுட்ப கல்லூரியிலும், சேலம் வடக்கு தொகுதியில் பணிபுரியவுள்ள 1,979 பேருக்கு சின்னத்திருப்பதி தனியார் கல்லூரியிலும் பயிற்சி வகுப்பு நடத்தது.
மேலும், சேலம் தெற்கு தொகுதியில் பணிபுரியவுள்ள 1,335 பேருக்கு அம்மாப்பேட்டை தனியார் கல்லூரியிலும், வீரபாண்டி தொகுதியில் பணிபுரியவுள்ள 1,524 பேருக்கு பெரிய சீரகாபாடி தனியார் பொறியியல் கல்லூரியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது.
வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்களின் விவரங்கள், வாக்குப் பதிவின்போது மேற்கொள்ளவேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு தொகுதியிலும் நடந்த பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, “தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தவறாமல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள” அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) வீர் பிரதாப் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT