Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM
கரோனா ஊரடங்கு காரணமாக ஓராண்டாக நிறுத்தப்பட்ட சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று (15-ம் தேதி) முதல் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாழப்பாடி மற்றும் தலைவாசல் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான, சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில், பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில்,சேலம்- விருத்தாசலம் பயணிகள்ரயில் உள்ளிட்ட பல ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், ஓராண்டு இடை வெளிக்குப் பின்னர் சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று முதல் சிறப்பு விரைவு ரயிலாகஇயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில்நிலையமான சேலம் டவுன் ரயில் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. ரயில் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.30-ல் தொடங்கி ரூ.45, ரூ.55, சேலம்-விருத்தாசலத்துக்கு கட்டணம் ரூ.60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ரயில் அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, தலைவாசல், மேல்நாரியப்பனூர், சிறுவத்தூர், கூத்தக்குடி ஆகிய இடங்களில் நிற்காது எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், சேலம்-விருத்தாசலம் ரயிலை,வழக்கம் போல அனைத்து இடங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ஐக்கிய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் சங்கரய்யா, தலைவாசல் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மையம் தலைவர் வழக்கறிஞர் கோவிந்தன் உள்ளிட்டோர் கூறிய தாவது:
சேலம்- விருத்தாசலம் ரயில் அனைத்து இடங்களிலும் நிற்காது என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. வாழப்பாடி, தலைவாசல் உள்ளிட்ட இடங்களில் இருந்து தினமும் அரசு ஊழியர்கள், தினக்கூலிகள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள் ஆகியோர் தினமும் ரயிலை பயன்படுத்தி வந்தனர்.
இப்போது, தற்காலிகமாக ரயில் நிற்காது என்ற அறிவிப்பு அனைத்து தரப்பினருக்கும் அலைச்சலையும், கூடுதல் செலவு உள்ளிட்ட பிரச்சினைகளையும் ஏற்படுத்திஉள்ளது. எனவே, அனைத்து இடங்களிலும் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT