Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக - வெளிமாநிலங்களில் இருந்து யாராவது வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் : பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்

திருப்பத்தூர்

கரோனா பரவலை தடுக்க வெளி மாநில பயணங்களை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். அதே போல, வெளி மாநிலங்களில் இருந்து வருவோர்கள் குறித்த தகவல்களை உடனடியாக சுகா தாரத்துறையினருக்கு தெரியப் படுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் அமல்படுத்தப்பட்ட கரோனா கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்படவில்லை. ஆனால், பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் மட்டும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,எப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி யுள்ளது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங் களிலும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.

இதனால், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர்களுக்கு ‘இ-பாஸ்’ நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில், வியாபாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர்களுக்கு மாநில எல்லைப்பகுதிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா 2-வது அலை பரவலை கட்டுக்குள் கொண்டு வர திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் தீவிர முயற்சிகள் எடுத்து வரு கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வந்தாலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மாவட்ட சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக் கைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பத்தூரையொட்டி கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் இருப்பதால் மாநில எல்லைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கியபோது பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்ததுபோல் தற்போதும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா பரிசோதனையை அதிகரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேவையில்லாமல் வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல, வெளி மாநிலங் களில் இருந்து நண்பர்கள், உறவினர்கள் என யாராவது திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்தால் உடனடியாக அந்தந்த ஊராட்சிச் செயலாளர் அல்லது மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொது இடங் களுக்கு வரும்போது பொதுமக்கள் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வெளியே செல்லும் போது சிறுவர், சிறுமிகளை அழைத்துச் செல்வதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் வந்தால் ரூ.200 வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரத்தில், திருப்பத் தூர் மாவட்டத்தில் உள்ள உண வகங்கள், தேநீர் கடைகள், பேக்கரி, இனிப்பு மற்றும் பலகார கடைகள், வணிக நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உணவகங் களில் குறைந்த அளவிலான ஆட்களை அனுமதித்து உணவளிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துவர அறிவுறுத்த வேண்டும். கரோனா விதிமுறைகளை பின்பற்ற வணிக நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், ‘சீல்' வைக்கும் நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தெர்மோ மீட்டர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, தேர்தல் காலம் என்பதால் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், அரசியல் கட்சி தலைவர்கள் வருகை, தெரு பிரச்சாரம் ஆகியவைகளில் அதிக கூட்டம்கூடாமலும், கரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றால் மீண்டும் ஒரு ஊரடங்கை சந்திக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்பதால் பொது மக்கள் விழிப்புடனும், முன்னெச்சரிக் கையுடன் செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் யாருக்கேனும் காய்ச்சல், இருமல், சளி தொந் தரவு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கரோனா பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x