Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை தொகுதியில் பணியாற்றும் அலுவலர்களுக்கு 18-ம் தேதி பயிற்சி :

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக் கூடிய தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார்.

சேலம்

‘சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் பணிபுரியும் 20,544 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு வரும் 18-ம் தேதி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வழங்கப்படவுள்ளது.’ என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராமன் தெரிவித்துள்ளதாவது:

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் 20,544 நபர்களுக்கு, ஓட்டுப்பதிவின் போது பணியாற்றுவது குறித்து பயிற்சி வகுப்பு நேற்று வழங்கப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவில் பணிபுரிய உள்ள 5,136 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 5,136 வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை - 1, 5,136 வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை – 2 மற்றும் 5,136 வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை - 3 என மொத்தம் 20,544 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பணியாளர்களுக்கான முதல் பயிற்சி வரும் 18-ம் தேதி அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களில் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் பல்வேறு துறைகளில் இருந்து வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை - 1, வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை – 2 மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை - 3 மற்றும் பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. ஏற்கெனவே, இதுகுறித்த பயிற்சி பெற்ற மண்டல அலுவலர்கள் இப்பணியாளர்களுக்கு பயிற்சியினை அளிக்க உள்ளார்கள். இப்பயிற்சியில் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்களின் விவரங்கள், வாக்குப்பதிவின்போது மேற்கொள்ளவேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் செய்முறை பயிற்சி மற்றும் இதர பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன.

முதற்கட்ட பயிற்சியில் பங்குபெறும் அனைத்து அலுவலர்களும் கரோனா நோய் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டு, அதற்கான சான்றிதழை தயாராக வைத்திருக்க வேண்டும். இதுவரை 88 சதவீதம் வாக்குச்சாவடி அலுவலர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x